Tuesday, June 29, 2010

போர்நிறுத்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் - சொல்ஹேய்ம்

ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் மோதல்களை நிறுத்த உடன்படுமாறு 2009 ஜனவரியில் விடுதலைப் புலிகளிடம் தாம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்தார்.

“ஜனவரியில் அரசாங்கம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை எல்லோரும் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. அதற்குமேல், அரசாங்கத்தின் வெற்றியைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை என்பது தெரிந்துவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர முன்வருமாறு நானும், நோர்வே அரசாங்கமும் விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்” என்று தெரிவித்த எரிக் சொல்ஹேய்ம்,
“அந்த நேரத்தில் அது நடந்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அமெரிக்கா அல்லது இந்தியா அல்லது யாராவது ஒருவரின் கண்காணிப்பின் கீழ் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும்” என்று மேலும் குறிப்பிட்டார்.

“துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் அதனை அப்போது நிராகரித்துவிட்டார்கள். அந்த வேளையில் எம்மைத் துரோகிகள் என்று குறிப்பிடும் பிரசாரங்கள் சில தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன” என்றார் சொல்ஹேய்ம்.

எனினும், தொடர்ந்து தாம் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறிய அவர், அப்போது தெற்காசியாவில் இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவருடன் பல தடவைகள் தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏதோ ஒரு வகையில் பிரபாகரனுடன் பேசி, ஐ.நா. அனுசரணையுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல தடவைகள் முயற்சித்தாகவும் தெரிவித்தார்.

எனினும், பல்வேறு காரணங்களால் இவை எல்லாமே அரசாங்கத்தினாலும், விடுதலைப் புலிகளினாலும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

“இறுதி நாளான மே 17ம் திகதி நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சரணடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு கோரினர். எம்மிடம் மட்டுமன்றி, ஐ.நா. மற்றும் ஐ.சி.ஆர்.சி. ஆகியவற்றிடமும் விடுதலைப் புலிகள் இதே கோரிக்கையை முன்வைத்தனர்’’ என்று தெரிவித்த சொல்ஹேய்ம், இது விடயத்தை தாம் இலங்கை அரசாங்கத்துக்கு உடன் அறியத்தந்ததாகவும் கூறினார்.

“இது மிகவும் காலம் பிந்தி விடுக்கப்பட்ட கேரிக்கை. அந்த நேரத்தில் அவ்வாறான ஒரு சரணடைவை ஒழுங்குபடுத்த முடியாது என்பதை அவர்களுக்கு நான் சொன்னேன். சரணடைய விரும்பினால் வெள்ளைக்கொடி மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் அவர்களது நோக்கத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி அதனைச் செய்யும் வழிவகையைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் அந்த வேளையில் நான் கூறியிருந்தேன்’’ என்றார் எரிக் சொல்ஹேய்ம்.

“சில மணி நேரங்களின் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக எமக்கு அறியத்தரப்பட்டது” என்று முடித்தார் சொல்ஹேயம்.

விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய இருக்கிறார்கள் என்ற தகவல் அரசாங்கத்துக்குத் தெளிவாகக் கொடுக்கப்பட்ட என்று கூறிய அவர், எனினும், யாருக்கு அந்தத் தகவல் கொடுக்கப்பட்டது என்று கூற மறுத்துவிட்டார். இது தொடர்பாக மேலதிகமாக எதையும் தாம் கூற விரும்பவில்லை என்றும், எனினும், ஏனைய தரப்புக்களும் இந்தத் தகவலை அரசாங்கத்துக்கு வழங்கின என்று சொன்னார்.

இடம்பெயர்ந்N;தார் நிலை
இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் முகாம்களிலிருந்து வெயேறிவிட்டார்கள் என்பது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள தவிர ஏனைய முகாம்கள் திறந்துவிடப்பட்டிருப்பதும் முன்னேற்றகரமான ஒரு விடயம் என்றும் சொன்ன சொல்ஹேயம், சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாகவிருந்தால் தாம் அதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும்அவர் மேலும் சொன்னார்.

இந்திய ஊடகவியாளர் நாராயணசுவாமியும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றி ஆராய்ந்து புத்தகங்களை வெளியிட்டிருப்பதாக தாம் அறிந்துகொண்டதாகக் கூறிய அவர், தமது பங்குக்கு இலங்கையில் தமது செயற்பாடுகள் தொடர்பாகவும், அவற்றின் நல்ல மற்றும் தீய அம்சங்கள் தொடர்பிலும் சுயாதீனமான ஆய்வொன்றை நோர்வே அரசாங்கமும் மேற்கொள்ளவிருப்பதாகவும் மேலும் சொன்னார்.

நோர்வேயினதும், எரிக் சொல்ஹேய்மினதும் சமாதான முயற்சிகள் தொடர்பாக இலங்கை ஊடகங்கள் தவறான முறையில் அளிக்கைகயைச் செய்ததாகக் கருதுகிறீர்களா என்று கேட்டபோது ‘ஆம்’ என்று தெளிவாகப் பதிலளித்த சொல்ஹேய்ம், “மாறுபட்ட கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கும், அப்பட்டமான பொய்யுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்கள் விடயத்தில் நிறைய அப்பட்டமான பொய்கள் சொல்லப்பட்டன” என்று கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ரேடியோ கருவிகளை வழங்கியதாக கருணா குற்றஞ்சாட்டியதாக ஒரு அப்பட்டமான பொய் தொடர்பில் பெரியளவில் செய்திகளை வெளியிட்டிருந்த இலங்கை ஊடகங்கள், பின்னர் கருணா அந்தத் தகவலை மறுத்தபோது அதுபற்றி போதியளவு செய்திகளை வெளியிட்டிருக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சமாதானத்துக்கான அரிய சந்தர்ப்பம்
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருப்பதாகக் கூறிய எரிக் சொல்ஹேயம், முன்னதாக போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், சுனாமியின்போதும் கிடைத்த இத்தகைய சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

“இப்போது மீண்டும் அத்தகையதொரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி முதலில் போரிலும், பின்னர் தேர்தலிலும் வெற்றிபெற்று, மிகுந்த பலமான ஒரு நிலையில் இப்போது இருக்கிறார். இந்தப் பலத்தைக் கொண்டு அவரால் நிலையான சமாதானத்தையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் வழங்க முடியும்” என்றார் சொல்ஹேய்ம்.

உலகிலுள்ள நாடுகளில் இலங்கை வரப்பிரசாதமான பண்புகளைக் கொண்ட ஒரு நாடு. ஆசிய கண்ணோட்டத்தில் அது அதிகூடிய கல்வியறிவுடையோரைக் கொண்டுள்ளது. உல்லாசப் பயணிகளால் அது சொர்க்காபுரி என்று வர்ணிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட சொல்ஹேய்ம்,

“ஆனால், இந்தச் சொர்க்காபுரி வெறுமனே நிலத்துடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அதனுடைய மக்களுடனும் சம்பந்தப்பட்டது. பொருளாதார ரீதியாக அபரித வளர்ச்சி கண்டுவரும் அந்த நாட்டின் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” என்று கூறி முடித்தார்.


No comments:

Post a Comment